search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார கார்கள் மீதான வரியை குறைக்க பரிசீலனை - பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்
    X

    மின்சார கார்கள் மீதான வரியை குறைக்க பரிசீலனை - பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்

    மின்சார கார்கள் மீதான வரியை குறைக்க பரிசீலனை நடைபெறுவதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பா.ஜனதா உறுப்பினர் வருண் காந்தி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    மின்சார கார்கள், சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஜி.எஸ்.டி. கவுன்சில் முன்பு நிலுவையில் உள்ளது. அதுபற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிசீலித்து வருகிறது.

    ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததில் இருந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் எண்ணற்ற முடிவுகளை எடுத்துள்ளது. வர்த்தகர்களுக்கு ரூ.92 ஆயிரம் கோடி மதிப்புள்ள பலன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    ஜி.எஸ்.டி.யின் கீழ், வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.

    கடந்த மாதம் ஒரே நாளில் 21 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மூலம், தொடக்கத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும், காலமாற்றத்தில் ஜி.எஸ்.டி. முறை சிறப்பானதாக ஆகியுள்ளது.

    கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல், கடந்த ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2017-2018-ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 561 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வசூல், 2018-2019-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 81 ஆயிரத்து 563 கோடியாக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×