search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்- பட்னாவிஸ்
    X

    சிபிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்- பட்னாவிஸ்

    சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று சட்டமேலவையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் மாநில கல்வி வாரிய பாட திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மராத்தி மொழி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல மத்திய கல்வி வாரிய பாட திட்டமான சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் கல்வி வாரிய பாட திட்டமான ஐ.சி.எஸ்.இ. போன்ற பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை மராத்தி மொழிபாடங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. ஆனால் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மராத்தி மொழி பாடங்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.

    இது தொடர்பான பிரச்சினை நேற்று சட்ட மேலவையில் எதிரொலித்தது. சிவசேனா உறுப்பினர் நீலம் கோரே இந்த பிரச்சினையை கிளப்பி பேசினார். மாநில கல்வி வாரியத்தில் இடம்பெறாத பள்ளிகளில் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கக் கோரி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மும்பை ஆசாத் மைதானத்தில் வருகிற திங்கட்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து பேசியதாவது:-

    அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, இந்த சட்டத்தை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.



    அரசின் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு, மராத்தி மொழி பாடத்தை கற்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் தேவைப்பட்டால் நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அதன்படி அனைத்து பாட திட்டங்களின் கீழ் உள்ள பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயமாக கற்பிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும்.

    இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

    இதற்கிடையே மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சட்டசபையில் நிறைவேறியது. ஆனால், மருத்துவ மேற்படிப்புக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மராட்டிய அரசு, மராத்தா வகுப்பை சேர்ந்த மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அவசர சட்டம் கொண்டு வந்தது.

    இந்த அவசர சட்டத்தை செல்லுபடியாக்கும் வகையில் நேற்று சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×