search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சியில் 40 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி
    X

    ராஞ்சியில் 40 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
    ராஞ்சி:

    சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக யோகா செய்பவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்தப்படி உள்ளது. மனதை பக்குவப்படுத்தி, உடலை சீராக்கும் அற்புதமான ஆற்றல் யோகா சன பயிற்சிகளில் இருப்பதை உலக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதனால் சர்வதேச யோகா தினம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய நகரங்களில் நடந்தது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட உலகம் முழுவதும் இன்று காலை யோகா பயிற்சி செய்தனர். ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் 1,500 இடங்களில் யோகா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி பொது மக்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளார். இந்த ஆண்டு அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மக்களுடன் சேர்ந்து யோகா பயிற்சிகளை செய்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி யோகா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றே டெல்லியில் இருந்து ராஞ்சி வந்து விட்டார். இன்று காலை அவர் பிரபாத் தாரா பள்ளி மைதானத்துக்கு வந்தார். யோகா பயிற்சி தொடங்கும் முன்பு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சர்வதேச யோகா தினம், இந்த ஆண்டு 5-வது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, “இதய ஆரோக்கியத்துக்காக யோகா” என்ற பெயரில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாசனம் என்பது நமது நாட்டின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த ஒன்றாக உள்ளது.

    நமது மூதாதையர்கள் தினமும் யோகாசன பயிற்சிகளை செய்து ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தனர். யோகா பயிற்சி ஒன்றே அவர்களை நீண்ட நாட்கள் வாழ வைத்தது. எனவே நாம் ஒவ்வொருவரும் அவசியம் தினமும் யோகாசனம் செய்தல் வேண்டும்.

    சமீப காலமாக நமது நாட்டில் நிறைய இளைஞர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது. தினமும் யோகாசன பயிற்சிகளை செய்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபட முடியும். இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்துக்கு “இதயத்துக்காக யோகா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    சமுதாயத்தில் அனைத்து பிரிவு மக்களும் யோகா செய்யும் வகையில் யோகா பயிற்சிகளை சொல்லி கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலாலும் நகர்ப்பகுதி மக்கள்தான் யோகா செய்கிறார்கள். இந்த யோகாவை கிராமங்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பழங்குடி இன மக்களும் யோகா பயிற்சிகள் செய்ய உதவ வேண்டும்.

    யோகா பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது. மதங்களை கடந்தது யோகா. எனவே அனைவரும் யோகா செய்ய வேண்டும்.

    யோகா பயிற்சி முறைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். யோகா பயிற்சி பற்றிய விழிப்புணர்வு உள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை உருவாக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    நமது தினசரி வாழ்வின் ஒரு வழக்கமாக யோகா பயிற்சி வளர வேண்டும். அப்படி யோகாசனம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் மனதில் அமைதி ஏற்படும். யோகாவை தினமும் செய்து வந்தால் மனமும், உடலும் பக்குவமான நிலைக்கு வரும்.

    யோகாசன கலாச்சார எல்லை கடந்து செல்லக் கூடியது. உலகம் முழுவதும் யோகா பயிற்சி முறைகள் பரவ வேண்டும். அது ஒன்றே உலக மக்களிடம் மனித நேயத்தை உருவாக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிறகு பிரதமர் மோடி யோகாசன பயிற்சி முறைகளை செய்தார். அவருடன் சுமார் 40 ஆயிரம் பேர் சேர்ந்து யோகா பயிற்சிகளை செய்தனர்.

    மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங் டெல்லியிலும், அமித்ஷா ரோதக் நகரிலும், நிர்மலா சீதாராமன் கிழக்கு டெல்லியிலும் யோகா பயிற்சி செய்தனர். சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற ஊழியர்களுடன் சேர்ந்து யோகா செய்தார்.

    கவுதம் காம்பீர் டெல்லியில் உள்ள விளையாட்டரங்கிலும், நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையிலும் யோகா செய்தனர்.
    Next Story
    ×