search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் குடிநீர் தட்டுப்பாடு - பக்தர்கள் சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் வேண்டுகோள்
    X

    திருப்பதியில் குடிநீர் தட்டுப்பாடு - பக்தர்கள் சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் வேண்டுகோள்

    திருப்பதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களும், உள்ளூர் மக்களும், வியாபாரிகளும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    திருமலை:

    தமிழகத்தில் மட்டுமில்லை ஆந்திராவிலும் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. திருப்பதி மலையில் ஆகாச கங்கை, கோகர்ப்பம், பசுபுதாரா, குமாரதாரா, பாபவிநாசனம் ஆகிய 5 அணைகள் உள்ளது. இந்த அணைகளில் தண்ணீர் வற்றிபோய் கால்வாய் போல் கிடக்கிறது. பசுபுதாரா, குமாரதாரா, பாபவிநாசனம் ஆகிய அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்தத் தண்ணீர் இன்னும் 75 நாட்களுக்கு மட்டுமே வரும். மழை பெய்தால் தான் திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான நீர் நிலையத்துறை அதிகாரிகள் ஸ்ரீவாரிமெட்டு, சீனிவாசமங்காபுரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துறை கிணறு போட்டு, அங்கிருந்து 4½ கிலோ மீட்டர் தூரத்துக்குக் குழாய்கள் பதித்து, திருமலைக்குத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    திருமலையில் உள்ள தனியார் மடம், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் ஒரு குழாயில் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற குழாய்களுக்குத் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை அடைக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    திருமலையில் பாலாஜி நகர், ஆர்.பி.சென்டர் ஆகிய பகுதிகளில் 3 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பக்தர்களும், உள்ளூர் மக்களும், வியாபாரிகளும், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருப்பதி மாநகராட்சி கமி‌ஷனர் விஜயராமராஜுவிடம், திருப்பதியில் உள்ள ஜீவகோணா, சிவஜோதி நகர், திருமலா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    திருப்பதி மாநகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரும் நேரத்தில் ஒருவருக்கு 3, 4 குடங்களே தண்ணீர் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது?

    எனவே திருப்பதி மாநகராட்சியில் லாரி, டிராக்டர்கள் ஆகியவை மூலம் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பல வீடுகளில் குடும்பத் தலைவர்கள் வேலைக்குச் செல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

    எங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை என்றால் யாரிடம் செல்வது என்றே தெரியவில்லை. லாரி, டிராக்டர் டேங்கர்கள் வந்தால் தண்ணீர் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்படுகிறது. எங்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி கமி‌ஷனர் விஜயராமராஜு கூறியதாவது:-

    திருப்பதி கல்யாணி நீர்த்தேக்கத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. அங்கிருந்தும், தெலுங்கு கங்கை கால்வாயில் இருந்தும் தண்ணீர் எடுத்து வந்து, மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம்.

    ஏற்கனவே ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்தோம். தற்போது 4 நாட்களுக்குப் பிறகு குடிநீர் வினியோகம் செய்கிறோம். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இதற்கு முன்பு மார்ச் மாதம் வரை தினமும் குடிநீர் வினியோகம் செய்தோம். தற்போது சிரமமாக உள்ளது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு மாநகராட்சி கமி‌ஷனர்  கூறினார்.
    Next Story
    ×