search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் உத்தரவு எதிரொலி - 9.30 மணிக்கு அலுவலகம் வரும் மத்திய மந்திரிகள்
    X

    பிரதமர் உத்தரவு எதிரொலி - 9.30 மணிக்கு அலுவலகம் வரும் மத்திய மந்திரிகள்

    பிரதமர் மோடியின் உத்தரவுக்கு பிறகு பெரும்பாலான மந்திரிகள் 9.30 மணிக்கே அலுவலகம் வந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்தபோது அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே இவர் அலுவலகத்துக்கு வந்து விடுவார். பிரதமர் ஆனதற்கு பிறகும் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறார்.

    இப்போது 2-வது முறையாக பிரதமர் பதவி ஏற்ற நரேந்திர மோடி சக மந்திரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

    அதில் மந்திரிகள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தவறாமல் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். வீட்டில் இருந்து அலுவல்களை கவனிப்பதை கைவிட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு முன்பு பல மந்திரிகள் தாமதமாக அலுவலகம் வருவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடியின் உத்தரவுக்கு பிறகு பெரும்பாலான மந்திரிகள் 9.30 மணிக்கே அலுவலகம் வந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் சற்று தாமதமானாலும் கூட 10 மணிக்குள் அலுவலகம் வந்து விடுகிறார்கள்.

    முக்தர் அப்பாஸ் நக்வி தினமும் தனது வீட்டில் பொதுமக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். காலை 10 மணியில் இருந்து அவர் பொதுமக்களை சந்திப்பார். அது முடிந்ததற்கு பிறகு தான் அலுவலகம் வருவார். ஆனால் இப்போது அவர் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். 9.30 மணிகே அலுவலகம் வந்து விடுகிறார்.

    மூத்த மந்திரி ராம்விலாஸ் பஸ்வானும், இதற்கு முன்பு தாமதமாக அலுவலகம் வருவார். இப்போது காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்து விடுகிறார். தினமும் காலையில் குறிப்பிட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுகிறார். தனது அலுவலக வாசலில் தனது துறை பற்றிய தகவல்கள் மக்களுக்கு தெரியும் வகையில் கம்ப்யூட்டர், பலகை பொருத்த உத்தரவிட்டுள்ளார். அதில் தொடு திரை மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.



    மத்திய மந்திரிகள் ஹர்சவர்த்தன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் 9.30 மணிக்கு முன்பாகவே அலுவலகம் வந்து விடுகிறார்கள்.

    புதிய மந்திரிகள் கஜேந்திர சிங் மற்றும் பல புதிய முகங்கள், 9.30 மணிக்கே தங்களது பணிகளை தொடங்கி விடுகின்றனர்.

    அதே போல மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா அதிக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி அனைத்து மந்திரிகளும் அடுத்த 100 நாளில் என்ன செய்யப்போகிறோம் என்பதை திட்டங்களாக உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் கூறி இருந்தார். அதற்கான திட்டங்களை உருவாக்குவதில் அர்ஜூன் முண்டா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

    மேலும் கேபினட் மந்திரிகள் தங்களுக்கு கீழ் உள்ள ராஜாங்க மந்திரிகள் மற்றும் துணை மந்திரிகளுக்கு அதிக அளவில் பணிகளை பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார். அதன்படி பல மந்திரிகளும் கீழ் உள்ள மந்திரிகளுக்கு அதிக கோப்புகளை அனுப்பி வருகிறார்கள்.

    எனவே அனைத்து மந்திரிகளும் பிசியாக பணியாற்றி வருகிறார்கள்.
    Next Story
    ×