search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருடர்கள் தேவை இல்லை: எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் - மம்தா
    X

    திருடர்கள் தேவை இல்லை: எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் - மம்தா

    எங்கள் கட்சியில் திருடர்கள் தேவை இல்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் சவாலை உருவாக்கி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை வென்ற நிலையில் பாரதிய ஜனதா 18 இடங்களை வென்றது.



    2021-ம் ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாரதிய ஜனதா வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது.

    பாரதிய ஜனதாவின் எழுச்சி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் பாரதிய ஜனதாவுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். ஏற்கனவே சில எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என பலரும் கட்சி மாறி உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் விரைவில் 80 உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதுசம்பந்தமான ஆலோசனை கூட்டம் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்தது.

    அப்போது கட்சி மாறி செல்லும் நபர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் மம்தா பானர்ஜி பேசினார். அவர் கூறியதாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் தொண்டர்களுக்கு தான் இனி டிக்கெட் கொடுக்கப்படும். இதற்கு முன்பு தந்தை, மகன் என பார்க்காமல் டிக்கெட் கொடுத்தோம். அதுபோல் இனி செய்ய மாட்டோம்.

    ஒரே குடும்பத்தில் பலருக்கு டிக்கெட் கொடுப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்து உழைப்பவர்களாக இருக்க வேண்டும்.

    இதற்கு முன்பு மாவட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள். இதனால் உண்மையாக உழைக்கக் கூடிய உறுப்பினர்கள் அதிருப்தி அடையும் நிலை உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பலவீனமான ஒன்று அல்ல. 15, 20 கவுன்சிலர்கள் பணம் வாங்கிக் கொண்டு வெளியேறி இருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களும் இதே போல வெளியேறி இருக்கிறார்கள்.

    எந்த எம்.எல்.ஏ. விரும்பினாலும் கட்சியை விட்டு வெளியேறலாம். அவர்களை மறுபடியும் ஒருபோதும் கட்சியில் சேர்க்க மாட்டோம். திருடர்களாக இருப்பவர்கள் கட்சிக்கு தேவையில்லை.

    இந்த கட்சியில் இருந்து ஒரு நபர் வெளியே சென்றால் அதே இடத்தில் 500 பேரை நாங்கள் உருவாக்குவோம். கவுன்சிலர்கள் அரசு திட்டங்களுக்கு வழங்கப்படும் பணத்தில் கமி‌ஷன் பெறுவதாக புகார்கள் வந்துள்ளது. சிலர் பணிகளை தங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

    இதுபோன்ற தவறுகளை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மறுபடியும் போட்டியிடுவதற்கு டிக்கெட் வழங்கப்படாது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி பேசினார்.
    Next Story
    ×