search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்படுமா?- குமாரசாமி பேட்டி
    X

    தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்படுமா?- குமாரசாமி பேட்டி

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்படுமா? என்பதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்.

    அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள அகலயா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    தனது இறுதிச்சடங்கில் குமாரசாமி கலந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ மூலம் தனது விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, தற்கொலை செய்து கொண்ட விவசாயி சுரேசின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நிவாரண உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சுரேசின் மனைவியிடம் குமாரசாமி வழங்கினார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், சுரேசின் மகளின் படிப்புக்கு உதவுவதாகவும் முதல்-மந்திரி உறுதியளித்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வீடியோ பற்றிய தகவல் எனது கவனத்திற்கு வந்தது. அதன் பேரில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இங்கு வந்தேன். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தற்கொலை பிரச்சினைக்கு தீர்வல்ல.

    தன்னை நம்பியுள்ள குடும்பத்தினரை பற்றி விவசாயிகள் சற்று யோசிக்க வேண்டும். இந்த பகுதியில் 50 ஏரிகளில் நீர் நிரப்ப ரூ.213 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் ஆழ்துளை கிணறுகளில் நீர் கிடைக்கும்.

    கிராம தரிசன திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன். இதை நாடகம் என்று எடியூரப்பா குறை சொல்கிறார். சமீபத்தில் கொப்பல், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் எடியூரப்பா வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது, நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகளை அவர் பாராட்டியிருக்கிறார்.

    ஆனால் அரசியலுக்காக நாங்கள் அரசு மீது குறை சொல்கிறோம், அதை பற்றி அதிகாரிகள் தவறாக கருத வேண்டாம் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். இங்கு நாடகமாடுவது எடியூரப்பா தான், நான் அல்ல.



    கிராம தரிசனத்தால் என்ன பயன், அதற்கு பதிலாக வறட்சி பகுதியை குமாரசாமி ஆய்வு செய்ய வேண்டும் என்று எடியூரப்பா சொல்கிறார். வறட்சி நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

    கிராமத்தில் தங்கி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிவு செய்த பிறகு, பா.ஜனதாவினர், நான் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்ததாகவும், இப்போது கிராமத்திற்கு செல்வதாகவும் குறை சொல்கிறார்கள். நான் நட்சத்திர ஓட்டலிலும் தங்குவேன், குடிசையிலும் தங்குவேன்.

    நான் முன்பு மேற்கொண்ட கிராம தரிசன திட்டத்தில் தங்கிய கிராமங்களில் என்னென்ன பணிகள் நடந்தன என்பது எனக்கு தெரியும். பல்வேறு கிராமங்களில் பிரச்சினைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி செய்தவர்கள் யார்.

    இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் நான் தான் காரணமா?. ஏதோ ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, ஏழை மக்களுக்கு முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன். இதற்காக உழைக்க நான் தயாராக உள்ளேன். எனது உழைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    மழை இல்லாததால் விவசாயிகள் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள். மழை காலம் தொடங்குவதால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளேன். நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். நாம் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். காவிரி ஆணையம், நடுவர் மன்றம், கோர்ட்டுகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

    காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்கிறது. அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறிய கருத்துப்படி தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக விரைவில் கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×