search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை மந்திரி வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருக்கிறார் - காங்கிரஸ் தாக்கு
    X

    சுகாதாரத்துறை மந்திரி வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருக்கிறார் - காங்கிரஸ் தாக்கு

    பீகார் மாநிலத்தில் பரவிவரும் மூளை காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை மந்திரி எந்த நடவடிக்கையயும் எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதையடுத்து, அங்குள்ள முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

    நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நேற்றுவரை 100 பேர் பலியாகியிருந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. 



    இந்நிலையில், பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறுகையில், 2014 ஆம் ஆண்டு ஹர்ஷ் வர்தன் சுகாதாரத் துறை மந்திரியாக இருந்தபோதும் இதே முசாபர்பூர் நகரில் மர்ம காய்ச்சலுக்கு 139 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதே போன்ற சம்பவம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. நோயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டிய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருக்கிறார், நோயை கட்டுப்படுத்த எந்த வேலையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×