search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது - வருமான வரித்துறை
    X

    பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது - வருமான வரித்துறை

    சட்டவிரோத பண பரிமாற்றம், ஊழல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள், வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது என்று வருமான வரித்துறை புதிய விதிமுறை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வருமான வரித்துறையில் கொள்கை முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.), வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் குற்றங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது.

    வருமான வரி ஏய்ப்பு குற்றம் செய்தவர்கள், உரிய வரியையும், சர்சார்ஜ் எனப்படும் கூடுதல் வரியையும் செலுத்தினால், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படாது. இந்தவகையில், அவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற்று வருகிறார்கள்.

    ஆனால், மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து இனிமேல் நிவாரணம் பெற முடியாது.

    இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேசவிரோதம், பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுபவர்கள், ஊழலுக்காக சி.பி.ஐ., லோக் பால், லோக்ஆயுக்தா, போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் விசாரிக் கப்படுபவர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது.

    நேரடி வரிகள் சட்டத்தின் படி, கோர்ட்டால் தண்டிக் கப்பட்டவர்கள், மற்றவர்களை வரி ஏய்ப்பு செய்ய தூண்டியவர்கள், வெளிநாட்டு சொத்துகளையும், வெளிநாட்டு வங்கிக்கணக்கையும் மறைத்தவர்கள், பினாமி சொத்து தடுப்பு சட்டம், கருப்பு பண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழான குற்றங்களை செய்தவர்கள் ஆகியோரும் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது.

    2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்களும் நிவாரணம் பெற முடியாது. ஒருவரின் நடத்தை, இயல்பு, குற்றத்தின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் நிவாரண சலுகை மறுக்கப்படும்.

    தகுதியான நபர்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறை களை தளர்த்துவதற்கு மத் திய நிதி மந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×