search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோ டிரைவர் மீது போலீசார் தாக்குதல்- விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
    X

    ஆட்டோ டிரைவர் மீது போலீசார் தாக்குதல்- விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

    டெல்லியில் ஓட்டுநர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள முகர்ஜி நகர் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர், காவல்துறை வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் கத்தியை காட்டி காவலர்களை மிரட்டினார். பதிலுக்கு போலீஸ் ஒருவர் தூப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்போது அவர் தாக்கியதில் காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இதையடுத்து ஏராளமான காவலர்கள் அந்த ஓட்டுநரைச் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அப்போது அந்த ஓட்டுநரின் மகன் வாகனத்தை கொண்டு வந்து காவலர்கள் மீது மோதினார். இதையடுத்து காவலர்கள் அவரையும் பிடித்து லத்தியால் தாக்கினர். ஆட்டோ ஓட்டுநரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள் காலால் உதைத்தும் தாக்கினர்.

    இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த பலரும் இந்தச் சண்டைக் காட்சிகளை செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர் இடையேயான சண்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைக்கண்டு ஆவேசம் அடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு சென்று போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

    காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீக்கியர்கள் அமைப்பு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் காவலர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



    ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  சம்பவம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய  உள்துறை அமைச்சகம், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×