search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் இன்று கூடுகிறது - மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்?
    X

    பாராளுமன்றம் இன்று கூடுகிறது - மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்?

    பாராளுமன்றம் இன்று கூடுகிற நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை இல்லை. அந்த கட்சியில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியைத் தழுவினார்.

    இந்த தோல்வி, ராகுல் காந்திக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் அவர் தான் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் அமோக வெற்றி பெற்றார்.



    பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 10 சதவீத இடத்துக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியதால் இப்போதும் மக்களவை பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்து நிற்கிறது.

    தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கு, டெல்லியில் கடந்த மாதம் 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அதில் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்தது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை அடியோடு மாற்றி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது.

    ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக உள்ளார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் மட்டுமே பதவியில் தொடர்வதாக அவர் கூறி உள்ளார்.

    கடந்த 1-ந் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவி ஏற்கின்றனர். தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்தல், ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல் நடக்க உள்ளது.

    ஆனால் மக்களவை காங்கிரஸ் தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எப்போது இதற்கான தேர்வு நடைபெறும் என்பது குறித்தும் காங்கிரஸ் தலைமை மூச்சு விடவில்லை. இதனால் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. அது மட்டுமின்றி மக்களவையில் கட்சி எம்.பி.க்களை வழிநடத்துவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    முதலில் மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் கட்சி தலைவர் பதவியை தொடர்ந்து வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருவதால் அவர் மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டார் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த பதவிக்கு மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கே.சுரேஷ், கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி ஆகியோரும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×