search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் மீது தாக்குதல் - மாநில முதல் மந்திரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    X

    டாக்டர்கள் மீது தாக்குதல் - மாநில முதல் மந்திரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி: 

    மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

    இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசின் கோரிக்கையை டாக்டர்கள் நிராகரித்து விட்டனர்.



    முதல் மந்திரி மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    இதனிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் சிலர் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை சந்தித்து, மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

    இந்நிலையில், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். 

    தேவைப்பட்டால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிச்சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×