search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று புகார் செய்த காட்சி.
    X
    ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று புகார் செய்த காட்சி.

    ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’

    ரூ.1,230 கோடி மோசடி வழக்கில், புகார்களின் எண்ணிக்கை இதுவரை 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
    பெங்களூரு

    பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். தனது நகைக்கடையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய நகைக்கடையில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்சூர்கான் திடீரென்று தலைமறைவானார். அதைத்தொடர்ந்து, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் தன்னிடம் வாங்கிய ரூ.400 கோடியை திரும்ப தர மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்ய உள்ளதாக மன்சூர்கான் பேசும் ஆடியோ வெளியானது.

    இந்த நிலையில், மன்சூர்கானிடம் முதலீடு செய்த ஏராளமான பொதுமக்கள் கடந்த 10-ந் தேதி சிவாஜிநகரில் உள்ள அவருடைய நகைக்கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களிடம் இருந்து புகார்கள் பெற தொடங்கினர். மேலும் கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையே, வழக்கு விசாரணை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந்தே கவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக நகைக்கடையின் இயக்குனர் 7 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க நேற்று 4-வது நாளாக மோசடியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் புகார்கள் வாங்கப்பட்டன. புகார்களை கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்றைய நிலவரப்படி மன்சூர்கான் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில், நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் சிவாஜிநகரில் உள்ள மன்சூர்கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு பூட்டுப்போட்டு ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மன்சூர்கானின் கார் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மன்சூர் கானின் சொகுசு காரை சோதனையிட்டு பறிமுதல் செய்தனர்.

    இந்த கார் கடந்த 8-ந் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் விடப்பட்டது தெரியவந்தது. இதனால் மன்சூர்கான் கடந்த 8-ந் தேதியே வீட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மன்சூர்கான் எங்கிருக்கிறார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த மோசடி குறித்து நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்தியில், ‘மன்சூர்கான் நடத்திய நகைக்கடையின் மூலம் இதுவரை ரூ.1,230 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் மன்சூர்கான் நடத்திய நகைக்கடை சார்பில் தற்போதைய கணக்குப்படி ரூ.1,230 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
    Next Story
    ×