search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை
    X

    கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை

    கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. அப்போது ஒரு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

    வவ்வால் மற்றும் அணில்கள் கடித்து போடும் பழங்களை சாப்பிடுவதால் இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கடுமையான காய்ச்சலுடன் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    அந்த மாணவர் தற்போது ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கவசம் மற்றும் உடை அணிந்த மருத்துவர்கள் அவருக்கு கிசிச்சை அளித்து வருகிறார்கள்.

     


    ‘நிபா’ வைரஸ் பரவியதை தொடர்ந்து அந்த மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற் கொண்டு உள்ளது. சுகாதாரத் துறை மந்திரி சைலஜா நேரடி மேற்பார்வையில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாணவருடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் என்று 315 பேரை மருத்துவக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர். மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதில் 5 பேரில் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களுக்கு கொச்சியில் உள்ள கலமச்சேரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு முதலில் சிகிச்சை அளித்த 3 நர்சுகளுக்கும் தற்போது கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களும் கலமச்சேரி ஆஸ்பத்திரியில் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சைகள் தொடங்கி உள்ளது. ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனே பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எர்ணா குளம், கோழிக்கோடு திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேப்போல எர்ணாகுளத்தில் ‘நிபா’ வைரஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.

     


    ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், சிகிச்சைகளை மேற்பார்வையிடவும் 6 பேர் அடங்கிய மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்‌ஷவர்த்தன் உறுதியளித்து உள்ளார்.

    அவர் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி சைல ஜாவுடன் போனில் பேசி ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குமரி, நெல்லை, தேனி, கோவை ஆகிய 4 மாவட்ட எல்லைகளில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளனர்.

    எல்லையோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது வேலை காரணமாக கேரளாவுக்கு தினமும் சென்று வருகிறார்கள். அவர்களில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுகாதாரத் துறையினர் மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது நிபா காய்ச்சல் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுப்பது எப்படி? காய்ச்சல் பாதிப்பு வந்தால் எப்படி சிகிச்சை அளிப்பது என்பது பற்றி அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறும்போது, கேரளா சென்று வரும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் தற்போது நிபா காய்ச்சல் எதுவும் இல்லை. அதையும் தாண்டி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம். கிராம சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளோம் என்றார்.

    தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சாலை எல்லைகளில் வாகனங்களுக்கு ‘மருந்து தெளிப்பான்’ அடிக்கப்படுகிறது. இதே போல் ரெயில்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் ‘அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறி யாருக்காவது இருப்பது தெரிய வந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×