search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜினாமாவை வாபஸ் பெறுவது பற்றி ராகுல் தொடர்ந்து மவுனம் - வேதனையில் தொண்டர்கள் உண்ணாவிரதம்
    X

    ராஜினாமாவை வாபஸ் பெறுவது பற்றி ராகுல் தொடர்ந்து மவுனம் - வேதனையில் தொண்டர்கள் உண்ணாவிரதம்

    ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவது பற்றி ராகுல் காந்தி தொடர்ந்து மவுனம் சாதிப்பதால், வேதனையில் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
    புதுடெல்லி:

    2014, 2019 என தொடர்ந்து 2 முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிப்பதற்கான 10 சதவீத இடங்களைக்கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு அந்தக்கட்சி தள்ளப்பட்டது.

    இந்த மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிகுந்த அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் கடந்த 25-ந்தேதி டெல்லியில் நடந்தது. அதில் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார்.

    ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்காமல் நிராகரித்து விட்டது. அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளார்.

    அவர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வருவது இல்லை.

    ஆனால் அவர் ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.



    யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்த ராகுல் காந்தி, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) தனது இல்லத்துக்கு வந்த கட்சியின் மூத்த தலைவரும், தனது தாயாருமான சோனியா காந்தியையும், பொதுச்செயலாளரும் சகோதரியுமான பிரியங்கா காந்தியையும் சந்தித்தார்.

    மேலும் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலாவையும் சந்தித்தார்.

    அவர்கள் அனைவருமே ராகுல் காந்தி, தனது ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆனாலும் ராகுல் காந்தி இது தொடர்பாக வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

    இதில் வேதனை அடைந்த டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் ஜாட்டன், தொண்டர்களுடன் ராகுல் காந்தி வீட்டு முன்பாக நேற்று திடீர் உண்ணாவிரதம் இருந்தார். அவர்கள் அனைவரும் ராகுல் ராஜினாமாவை திரும்பப்பெற வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
    Next Story
    ×