search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து மத உணர்வை புண்படுத்தியதாக அமேசான் மீது வழக்குப்பதிவு
    X

    இந்து மத உணர்வை புண்படுத்தியதாக அமேசான் மீது வழக்குப்பதிவு

    இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமேசான் நிறுவனம், பொருட்களை விற்பனை செய்வதாக அந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நொய்டா:

     ‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட  பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும்.  இதன் இணைய விற்பனை, ஸ்டெப்பிள்சு நிறுவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிறுவனம் ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அன்றாட தேவைகளுக்கான அனைத்து பொருள்களையும் விற்க ஆரம்பித்தது. இந்த இணையத்தில் கணினி மென்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனையாகி வருகிறது.

    இந்த அமேசான் நிறுவனம், பல்வேறு நாடுகளில் தனி தளம் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்கிறது.



    இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.

    இதனையடுத்து நொய்டாவைச் சேர்ந்த விகாஸ் மிஷ்ரா என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ‘அமேசான் நிறுவனம் வெளியிட்ட விற்பனைக்கான புகைப்படங்கள், இந்து மத உணர்வை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் சமுதாய பதற்றத்தை தூண்டலாம். எனவே, அமேசான் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மேலும் நடக்காமல் இருக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அமேசான் நிறுவனம் மீது மத உணர்வை புண்படுத்துவது தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தை கண்டித்து  ‘#BoycottAmazon' எனும் ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு மகாத்மா காந்தியின் புகைப்படங்களை அவமதிக்கும் விதமான பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     
    Next Story
    ×