search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் புதிய சாதனை - ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடி வசூல்
    X

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் புதிய சாதனை - ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடி வசூல்

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. #GST
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம்ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.

    இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறியது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது அரசுக்கு மாத வருவாய் சராசரியாக ரூ.98 ஆயிரத்து 114 கோடியாக இருந்தது. அது மெல்ல மெல்ல அதிகரித்தபடி இருந்தது. கடந்த மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

    இந்த நிலையில் 2019-20ம் நிதி ஆண்டுக்கான கணக்கு கடந்த மாதம் தொடங்கியது. முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

    கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஜி.எஸ்.டி. வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளது.

    இது சராசரி ஜி.எஸ்.டி. வருவாயை விட 16.05 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரி வசூலில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி. அமல் செய்யப்பட்ட பிறகு இவ்வளவு அதிகமாக வசூல் ஆகி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.



    ஏப்ரல் மாதம் கிடைத்த 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாயும் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.21 ஆயிரத்து 163 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.28 ஆயிரத்து 801 கோடியாகும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.54 ஆயிரத்து 733 கோடியாகவும், தீர்வை வழியாக ரூ. 9 ஆயிரத்து 168 கோடியாகவும் உள்ளன.

    இறுதியாக அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் பிறகு மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.47 ஆயிரத்து 533 கோடி கிடைத்துள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.50 ஆயிரத்து 766 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    விற்பனை கணக்கு விவரங்களை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 72.13 லட்சமாக உயர்ந்ததால்தான் ஜி.எஸ்.டி. வரி வசூல் சாதனைக்கு வந்துள்ளது. #GST

    Next Story
    ×