search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொது வாகனங்களுக்கு தடை - எதிர்க்கட்சி தலைவர்கள் ஆவேசம்
    X

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொது வாகனங்களுக்கு தடை - எதிர்க்கட்சி தலைவர்கள் ஆவேசம்

    காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #MehboobaMufti #civilianrestriction #JammuSrinagarHighway
    ஜம்மு:

    சட்டசபை முடக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கவர்னர் சத்யபால் சிங் தலைமையில் ஜனாதிபதி ஆட்சிமுறை அமலில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடிப்பிடிக்கும் அல்லது சுட்டுகொல்லும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

    விரைவில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்திய கவர்னர் சில முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி இடங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.


    இதனால், கடந்த 2 நாட்களாக இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கிடையே, ரம்பான் மாவட்டத்தில் உள்ள அனோக்கி நீர்வீழ்ச்சி அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்பகுதியிலும் போக்குவரத்து முடங்கியது.

    இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, ஜம்முவை நோக்கி இன்று அதிகாலை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சலையில் பொது வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, இந்த தடையால் வர்த்தகர்கள் பெருமளவிலான பாதிப்பு அடைந்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு இணையான இந்த தடையால், சரக்கு லாரிகள் சரியாக சென்றுவர முடியாத நிலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    பாதுகாப்பு படையினரை ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம். அல்லது, இரவு நேரங்களில் மட்டும் பொது வாகனங்களுக்கு தடை விதித்து இந்த நெடுஞ்சாலை வழியாக அனுப்பி வைக்கலாம். எனவே, கவர்னர் இந்த தடையை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தியும் பிரதிபலித்துள்ளார். இது எங்கள் மாநிலம், எங்கள் மாநிலத்துக்குட்பட்ட சாலைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை இங்குள்ள மக்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

    மேலும், காஷ்மீர் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் இந்த தடை உத்தரவால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடைக்கு யாரும் அடிபணிய கூடாது. மக்கள் தங்களது விருப்பம்போல் சென்று வரவேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். #MehboobaMufti  #civilianrestriction #JammuSrinagarHighway 
    Next Story
    ×