search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு
    X

    பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு

    டெல்லியில் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். #ChandrababuNaidu #BJP
    ஐதராபாத் :

    தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பா.ஜனதா கட்சியின் தவறான கொள்கையால் மக்கள் மீது தேவையில்லாத சுமை ஏற்பட்டு இருக்கிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

    மேலும் சி.பி.ஐ., அமலாக்க துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இதன் மூலம் எந்த பதவிக்கும் வர நான் ஆசைப்படவில்லை. அதற்கு தகுதியான தலைவர்கள் நாட்டில் உள்ளனர்.



    பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் டிசம்பர் (அடுத்த மாதம்) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக நான் அழைப்பு விடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான பா.ஜனதாவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

    இதற்கு முன்பு மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நான் எதிர்த்து உள்ளேன். ஆனால் தற்போது நாட்டின் நலனுக்காக பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணி அமைவது ஜனநாயகத்தின் கட்டாயம் ஆகும். இது அரசியல் கட்டாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP
    Next Story
    ×