search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையை அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா முயற்சி- பினராயி விஜயன் குற்றச்சாட்டு
    X

    சபரிமலையை அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா முயற்சி- பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #PinarayiVijayan #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்பட இந்து அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தி வருவதால் இதுவரை சபரிமலையில் இளம்பெண்கள் யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை.

    தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்திருப்பதால் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர். இது பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    பாதுகாப்பு என்ற பெயரில் அய்யப்ப பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டும் சமீபத்தில் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சனைப்பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் அது பற்றி விவாதிக்கலாம் என்று சபாநாயகர் கூறினார். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு நீண்டு கொண்டேச் சென்றதால் பொறுமை இழந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரையும் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சட்டசபை கூட்டத்தில் பினராயிவிஜயன் பேசும் போது கூறியதாவது:-

    சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் பிரச்சனையில் மாநில அரசு அவசரம் காட்டவில்லை. அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.


    இந்த பிரச்சனையை வைத்து சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்தன. அயோத்தியில் என்ன நடந்ததோ அது தான் சபரிமலையிலும் நடந்தது. சபரிமலையில் நடைபெற்ற போராட்டம், வன்முறையின் பின்னணியில் சதி திட்டம் உள்ளது. சபரிமலையில் வன்முறையை ஒரு போதும் அரசு அனுமதிக்காது.

    சபரிமலையில் வன்முறை யில் ஈடுபட்டதாக 320 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களது பின்னணியை பார்த்தால் அவர்கள் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்பது தெரியும்.

    சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோவில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதன் மூலம் அவர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க முயன்று உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #PinarayiVijayan #BJP
    Next Story
    ×