search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது - காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம்
    X

    காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது - காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.டி.பி. திட்டம்

    கவர்னர் ஆட்சிக்குள் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகம் மலரும் வகையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. #OmarAbdullah #MehboobaMuftijoinhands #jammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த  கருத்து மோதல் ஒருகட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது. 
     
    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.

    புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 20-6-2018 முதல் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது.

    தற்போது நடைபெற்றுவரும் கவர்னர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்னும் நிலையில் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.

    இந்த தலவலை மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் நிதி மந்திரியுமான அல்தாப் புகாரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை இன்று அவரது வீட்டில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி, நமக்கான அடையாளங்களான அரசியலமைப்பு சட்டத்தின் 370, 35A ஆகிய பிரிவுகள் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதால் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியை பாதுகாக்க இந்த முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வெகு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    காஷ்மீர் சட்டசபையில் உள்ள (2 நியமன உறுப்பினர்கள் உள்பட) 89 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 23 உறுப்பினர்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர். 

    இங்கு ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 55 என்பது குறிப்பிடத்தக்கது. 

    தற்போது அமலில் உள்ள கவர்னர் ஆட்சி வரும் 19-12-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்க உரிமைகோரி மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான இந்த புதிய கூட்டணியின் சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் முதல் மந்திரியாக மெகபூபா முப்தி மீண்டும் பதவி ஏற்பாரா? அல்லது, அல்தாப் புகாரி நியமிக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. #OmarAbdullah #MehboobaMuftijoinhands #jammuKashmir
    Next Story
    ×