search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை மறுநாள் நடைதிறப்பு - சபரிமலையில்  3 நாட்கள் 144 தடை உத்தரவு
    X

    நாளை மறுநாள் நடைதிறப்பு - சபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு

    சபரிமலையில் 5-ந்தேதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் அவர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சபரிமலையில் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு உருவானது.



    இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி திங்கட்கிழமை மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    5-ந்தேதி நடை திறப்பையொட்டி இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல், பம்பை ஆகிய இடங்களில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை நடை திறப்பையொட்டி ஏ.டி.ஜி.பி. அணில் காந்த் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 ஐ.ஜி.க்கள், 5 எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    நிலக்கல் முதல் சன்னிதானம் வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். நிலக்கல் வரையே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலமே பக்தர்கள் செல்ல முடியும்.

    கேரள அரசு பஸ்களையும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிப்பார்கள் என்றும் பிரச்சினையை ஏற்படுத்தும் யாரும் பக்தர்கள் போர்வையில் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதற்கிடையில் கோட்டயத்தில் சபரிமலை கர்மசமிதி சார்பில் இந்து அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 126 இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் 13-ந்தேதி வரை தாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், சபரிமலையில் நடை திறக்கப்படும் 5-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் இரவு நடை அடைக்கப்படும் வரை கேரள முழுவதும் நாம ஜெப யாத்திரை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  #Sabarimala #SabarimalaTemple #Section144
    Next Story
    ×