search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
    X

    திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

    திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. #Tirupati #PlasticBan
    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது.

    50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து நாளை முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம் பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.

    திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் உடைமைகள், கடைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் திருப்பதி தேவஸ்தான சுகாதார ஆய்வாளர் கமிஷ்டி தலைமையில் நாளை முதல் திருமலை முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை நடத்துகின்றனர்.

    மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்கள் பொருட்களை சோதனை செய்யும்போதே பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அதனையும் மீறி கொண்டு வந்தால் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    லட்டுகளை போட்டுத் தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது. #Tirupati #PlasticBan
    Next Story
    ×