search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ - ராகுல் உறுதி
    X

    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ - ராகுல் உறுதி

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். #OROP #RahulGandhi
    புதுடெல்லி:

    முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 1996-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள், 1996-2005 வரை, 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்கள் என பிரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 2008-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் அதிக ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதனால் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை 2014-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டு இடைக்கால பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்தார்.

    இதற்காக ரூ.500 கோடி ராணுவ ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் 2014-15-ல் இது நடைமுறைக்கு வரவில்லை.

    இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் டெல்லியில் பலமுறை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சங்கப் பிரதிநிதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.



    சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், 2019- பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவி - ஒரே பென்ஷன்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பிரதமர் மோடியால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். #OROP #RahulGandhi

    Next Story
    ×