search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்த 200 பேர் மீது வழக்கு
    X

    சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்த 200 பேர் மீது வழக்கு

    சபரிமலை கோவிலுக்குசென்ற பெண்களை தடுத்ததாக 200 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். 18-ம் படியில் போராட்டம் நடத்திய தந்திரிகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. #SabarimalaProtests #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு இந்து அமைப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவில் நடை திறந்தபிறகு இப்போராட்டம் வலுவடைந்துள்ளது.

    கோவில் நோக்கி வரும் பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் சென்ற பத்திரிகையாளர் கவிதா, பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் சன்னிதானம் வரை சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதேசமயம் கோவில் மேல்சாந்திகள், கோவிலை பூட்டி விடுவோம் என்று தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், திடீரென 18-ம் படியின் கீழ் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மேல்சாந்திகளின் போராட்டம் பற்றி அறிந்ததும், கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம் போர்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். நடை பந்தலில் இருக்கும் பெண்கள் இருவரையும் உடனடியாக திருப்பி அனுப்பும்படி உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து கவிதா, பாத்திமா இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் இந்துக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே சபரிமலை சன்னிதான 18-ம் படியின் கீழ் போராட்டம் நடத்திய தந்திரிகள், மேல்சாந்திகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவிதாங் கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நேற்று இரவே நோட்டீசு அனுப்பப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்று கூறி வந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம், பக்தர்கள் போராட்டம் காரணமாக முந்தைய முடிவை மாற்றிக் கொண்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக கூறி உள்ளது.

    சபரிமலையில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இங்கு போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்களை தடுக்கக்கூடாது என்று போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இதனை மீறி நேற்றும் பத்தினம்திட்டை, நிலக்கல், பம்பை பகுதிகளில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.

    இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் கூறும்போது, போராட்டத்தில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை ஏற்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சபரி மலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போராட்டக்காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்றார்.

    இதற்கிடையே பத்தினம் திட்டா கலெக்டர், சபரிமலை பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 22-ந்தேதி மாலை சபரிமலை நடை அடைக்கப்படும். எனவே அன்று வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இன்று சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. #SabarimalaProtests #Sabarimala
    Next Story
    ×