search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொழிலாளி வீசி எறிந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு- தேடி எடுத்து தன் பெயரில் டெபாசிட் செய்த நண்பர்

    கேரளாவில் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்து தொழிலாளி வீசி எறிந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த சீட்டை அவரது நண்பர் எடுத்து தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். #KeralaLottery
    திருவனந்தபுரம்:

    கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசு குலுக்கல்களையும் நடத்தி வருகிறது.

    கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரிச்சீட்டு சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியை சேர்ந்த அஜினு (வயது 35) என்ற தொழிலாளி இந்த லாட்டரிச்சீட்டை வாங்கினார். பரிசு குலுக்கல் அன்று அவர் தனது லாட்டரிச்சீட்டுக்கு பரிசு விழுந்து உள்ளதா? என்று சரிபார்த்தார்.

    சிறிய பரிசில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை சரிபார்த்தபடி வந்த அவர் ரூ.10 ஆயிரம் பரிசு வரை பார்த்தும் தனது லாட்டரிச் சீட்டுக்கு பரிசு கிடைக்காததால் அந்த லாட்டரிச்சீட்டை கோபத்துடன் கசக்கி எறிந்து விட்டார்.

    ஆனால் அந்த லாட்டரிச் சீட்டுக்கு 2-வது பரிசான ரூ.10 லட்சம் கிடைத்திருந்தது. இது அவரது நண்பர் அனீஸ் கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அஜினுவிடம் சென்று லாட்டரிச்சீட்டுக்கு பரிசு ஏதும் கிடைத்து உள்ளதா? என்று விசாரித்தார். அப்போதுதான் அவர் அந்த லாட்டரிச்சீட்டை பரிசு கிடைக்கவில்லை என்று நினைத்து கசக்கி எறிந்து விட்டது தெரிய வந்தது.

    உடனே அவர் அந்த லாட்டரிச்சீட்டை தேடி கண்டுபிடித்தார். அதுபற்றி அஜினுவிடம் தெரிவிக்காமல் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டார். இதற்கிடையில் அஜினு லாட்டரிச்சீட்டு வாங்கிய கடைக்காரர் அவர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்த விவரத்தை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் லாட்டரிச்சீட்டை வீசிய இடத்தில் தேடியபோது அது கிடைக்கவில்லை. அப்போது தான் தனது நண்பனே தன்னை ஏமாற்றி லாட்டரிச் சீட்டை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி அஜினு பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி அஜினு கூறும் போது, எனது மகள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு கடன் வாங்கி செலவு செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு கிடைத்தால் அதன் மூலம் எனது மகளுக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற முடியும். எனவே எனக்கு போலீசார் உதவ வேண்டும் என்றார். #KeralaLottery
    Next Story
    ×