search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமருக்கு தொடர்பு உண்டு - ராகுல் நேரடி குற்றச்சாட்டு
    X

    விஜய் மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமருக்கு தொடர்பு உண்டு - ராகுல் நேரடி குற்றச்சாட்டு

    வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #VijayMallya
    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்று விட்டார்.

    அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது.

    டிசம்பர் மாதம் 10-ந்தேதி இது தொடர்பாக வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. அப்போது தான் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.



    இதற்கிடையில், விஜய் மல்லையா தப்பிச் சென்றதற்கு சி.பி.ஐ. மெத்தனமாக இருந்ததும் ஒரு காரணமாகும் என்று பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லையா கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி அவருக்கு எதிராக “லுக்அவுட்” நோட்டீஸ் ஒன்றை சி.பி.ஐ. வெளியிட்டது.

    அதில், “மல்லையா வெளிநாட்டுக்கு செல்ல இருந்தால் பிடிக்க வேண்டும்“ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த லுக்அவுட் நோட்டீஸ் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.

    அந்த திருத்தத்தில் விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு சென்று வரும் தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவித்தால் போதும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் மல்லையாவை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நீர்த்து போய் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பிடியுங்கள்’ என்பதை ‘தெரியப்படுத்துங்கள்’ என்று மாற்றியதன் மூலம் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல சி.பி.ஐ. அமைதியாக துணைபோயுள்ளது.

    அனைத்து விவகாரங்களையும் பிரதமருக்கு நேரடியாக தெரிவிக்கும் சி.பி.ஐ., இவ்வளவு பெரிய விவகாரத்தில் பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் லுக்அவுட் நோட்டீசில் திருத்தம் செய்தது என்பதை நம்புவதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #VijayMallya
    Next Story
    ×