search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்க தடை- சுப்ரீம் கோர்ட்டு யோசனை
    X

    தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்க தடை- சுப்ரீம் கோர்ட்டு யோசனை

    தேர்தலில் கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம் என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறியுள்ளது. #Supremecourt #criminal #election
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களில் சுமார் 20 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது.

    கடந்த சில ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போதும் நிறைய கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் கர்நாடகா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2655 வேட்பாளர்களில் 883 பேர் தீவிர கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், “கிரிமினல்களை போட்டியிட அனுமதிக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெறலாம்” என்றனர்.

    இதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் சின்னத்தை மறுப்பது புதிய சட்ட சிக்கல்களை உருவாக்கும். மேலும் இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் செய்ய முடியும். இதில் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை” என்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளால் அரசியலில் துர்நாற்றம் வீசுகிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்றனர்.

    நீதிபதிகள் மேலும் கூறுகையில், “அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களிடம் கிரிமினல் குற்றச்சாட்டு ஏதேனம் உள்ளதா என்பது பற்றிய முழு தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார்-யார் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பதை வாக்காளர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இதை தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவாக வெளியிட கோர்ட்டு பரிசீலனை செய்து வருகிறது” என்றனர்.



    நீதிபதிகளின் இந்த கருத்துக்கு மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். இது சட்டத்துக்கு எதிரானது என்றார். அவர் மேலும் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு இப்படியொரு உத்தரவை பிறப்பிப்பதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வேண்டும் என்றே கிரிமினல் குற்ற வழக்குகளை தொடுப்பார்கள். இது அரசியலில் அபாயகரமானதாக மாறி விடும்” என்றார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்கள்.

    நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் ஒரு முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்க்க எங்களால் உத்தரவிட முடியும். அதன்படி ஒரு வேட்பாளர் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருப்பது தெரிய வந்தால், அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிசின்னம் கிடையாது என்று அறிவிக்கலாம்” என்றார்.

    இந்த யோசனைக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் கமி‌ஷனுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது. #Supremecourt #criminal #election
    Next Story
    ×