
பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. அங்கு, மதுபானம் விற்பது மற்றும் குடிப்பது சட்டப்படி குற்றம்.
இந்நிலையில், பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரேபுரா மற்றும் மதாய்தீஹ் கிராமத்தில் பீகார் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அரியானா மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சோதனை நடத்திய பதேபூர் போலீஸ் அதிகாரி அஜய் குமார் கூறியதாவது :-
அரியானா மாநிலத்தில் இருந்து 356 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு லாரியில் கடத்திவரப்பட்ட 3049 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், சோதனையின் போது கடத்தல்காரர்கள் தப்பியோடிவிட்டனர். கடத்தல் லாரியின் உரிமையாளர் மற்றும் கடத்தலுக்கு உடந்தையானவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். #liquorseizedBihar