search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்கிறது: ராகுல் காந்தி பேச்சு
    X

    வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்கிறது: ராகுல் காந்தி பேச்சு

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூருவில் ராகுல் காந்தி ஓட்டுவேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர் வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்வதாக கூறினார். #RahulGandhi
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பெங்களூருவில் திறந்த வாகனத்தில் சாலைகளில் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    முன்னதாக ஓசூர் ரோட்டில் பிரசாரம் செய்த அவர், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டில் 15 தொழில் அதிபர்களின் ரூ.2 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்தது. விவசாயிகள் மற்றும் சிறிய தொழில் செய்பவர்களின் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் முன்வரவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது என்பது தவறான சம்பிரதாயம் என்று மத்திய அரசை நடத்துபவர்கள் கூறுகிறார்கள். பெரிய தொழில் அதிபர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வது சரியா?. வங்கிகளில் உள்ள 90 சதவீத பணம் 15 பெரும் பணக்காரர்களுக்கு செல்கிறது.

    கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பான முறையில் செயலாற்றி உள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஊழல்வாதிகளான எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களை அருகில் உட்கார வைத்துக்கொண்டு, மோடி ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

    நீதிபதி லோயா சம்பவத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதை பற்றி மோடி பேசுவது இல்லை. மோடியின் நண்பர்கள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டனர். அதுபற்றியும் மோடி வாய் திறப்பது இல்லை.

    சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பற்றியும், என்னை பற்றியும் மோடி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். இது பிரதமர் பதவிக்கு நல்லதல்ல. ஆனால் நாங்கள் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்கிறோம். பெங்களூருவின் வளர்ச்சிக்கு மோடி ரூ.550 கோடி மட்டுமே கொடுத்துள்ளார். இது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. அரசியல் சாசனத்தை மாற்றுவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி பாருங்கள்.

    பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    நிரவ் மோடி ரூ.35 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டார். ரெட்டி சகோதரர்கள் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இரும்புதாது முறைகேடு செய்தனர். சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு திட்டம் ஆகியவற்றால் ஏராளமான ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே ஆதார் திட்டத்தை முந்தைய மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அதை மோடி அரசு கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொண்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஆதார் தொடர்பான பிரச்சினைகளை தடுப்போம். தற்போதைய நிலையில் பயன்படுத்தும் ஆதார் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இது மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 
    Next Story
    ×