
பெங்களூரில் தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு பா.ஜனதா வேட்பாளர் பி.என். விஜயகுமார் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் 3-வது முறையாக பா. ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜெயநகர் தொகுதியில் இருந்து ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக அவருக்கு பா.ஜனதா கட்சி ‘சீட்’ வழங்கியது.
கடந்த சில நாட்களாக இவர் தீவிர பிரசாரம் செய்து வந்தார். நேற்று இரவு 9 மணிக்கு ஜெயநகர் 4-வது பிளாக்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது திடீர் என்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்தார். உடனடியாக அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
அவரது மறைவு செய்தி கேட்டு பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காலை அவரது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
விஜயகுமார் பா.ஜனதாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். கட்சிக்காக அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.
இவருக்கு ஏற்கனவே ரத்த கொதிப்பு இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு கூறி வந்தனர். ஆனால் தேர்தல் காரணமாக நேற்று வீடு வீடாக சென்று ஓய்வு இன்றி பிரசாரம் செய்து வந்தார்.
விஜயகுமார் மறைவு காரணமாக ஜெயநகர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் இன்று வெளியிடுகிறது. #KarnatakaElection2018 #BJP #BNVijayakumar