search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுகிறது- சந்திரபாபு நாயுடு முடிவு
    X

    மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுகிறது- சந்திரபாபு நாயுடு முடிவு

    சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று அறிவிப்பால் மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுவதாக சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு செய்துள்ளார். #ChandrababuNaidu

    விஜயவாடா:

    ஆந்திரா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

    இதனால் ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.

    இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதற்காக டெல்லிக்கு சுமார் 25 தடவை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இதையடுத்து பா.ஜ.க.- தெலுங்கு தேசம் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தெலுங்கு தேசம் மூத்த நிர்வாகிகள் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்தி வருகிறார்கள். இதை அறிந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அமித்ஷா, அருண்ஜெட்லி இருவரும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு சமரசம் செய்தனர்.

    இதற்கிடையே ஆந்திர மாநில அரசுக்கு சிறப்பு அந்தஸ்து தர இயலாது என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று சூசகமாக தெரிவித்தது. சிறப்பு அந்தஸ்துக்கு பதில் சிறப்பு நிதித் திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவு சந்திரபாபு நாயுடுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

    நேற்று தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், எம்.எல்.சி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணியையும் உறவையும் தெலுங்கு தேசம் முறித்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். இதையடுத்து பா.ஜ.க. உறவை துண்டித்துக் கொள்ளும் மனநிலைக்கு சந்திரபாபு நாயுடு வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசில் தற்போது அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவரும் தெலுங்கு தேசம் சார்பில் மந்திரிகளாக உள்ளனர். முதல் கட்டமாக அவர்கள் இருவரையும் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

    வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) தெலுங்கு தேசம் மத்திய மந்திரிகள் இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    மந்திரிகள் விலகிய பிறகும் ஆந்திரா மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் அடுத்தக்கட்டமாக மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக சந்திரபாபு நாயுடு அறிவிப்பார் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி பிரிவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி விடும்.

    பா.ஜ.க. கூட்டணியை முறித்து விட்டு, வரும் பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர பா.ஜ.க. மறுத்து விட்டதை மக்களிடம் தெரிவித்து ஆதரவு திரட்ட தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி விட்டதாக தெரிகிறது. எனவே தெலுங்கு தேசம் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று ஆந்திரா சட்ட சபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தெலுங்கு தேசம் நடத்தி வரும் போராட்டத்தில் நியாயம் உள்ளது.

    2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதற்கான அறிவிப்பில் நான் கையெழுத்திடுவேன்.

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராடினால் ஆந்திர மாநில மக்களுக்கு நீதி கிடைக்க செய்யும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்க பா.ஜ.க. அரசை நம்மால் பணிய வைக்க முடியும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #ChandrababuNaidu #tamilnews

    Next Story
    ×