search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திவால் சட்டத்தை திருத்தும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
    X

    திவால் சட்டத்தை திருத்தும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

    திவால் சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதன்படி வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள், சொத்து ஏலங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி விட்டார்.

    இதேபோன்று ஏராளமானவர்கள் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் ஏய்க்கும் நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் என்.பி.ஏ., (செயல்பாடு இல்லாத சொத்துகள்) என முத்திரை குத்தப்படுகிறது.

    இப்படி தனிப்பட்ட நபர்கள் மட்டுமல்லாது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் வகைப்படுத்தப்படுவது உண்டு.

    வராக்கடனுக்காக இவர்களின் சொத்துகள், திவால் சட்டத்தின் கீழ் ஏலத்துக்கு விடப்படுவது வழக்கம். ஆனால் ஏலத்தில் யார் பங்கேற்கலாம், யார் பங்கேற்கக்கூடாது என்பது பற்றி திவால் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இதன் காரணமாக, வங்கிக்கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துகள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி அவர்களின் சொத்துகள்மீது ஏல நடவடிக்கை எடுக்கிறபோது, பிரச்சினைக்குரிய நபர்களோ, அவர்களது கார்ப்பரேட் நிறுவனமோ, நிறுவனத்தின் துணை நிறுவனமோ, சகோதர நிறுவனமோ அந்த சொத்துகளை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து மோசடியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.



    அவர்கள் ஏலத்தில் பங்கேற்க தடை விதித்து, திவால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நேர்மையற்ற நபர்கள் திவால் சட்ட பிரிவுகளை தவறாக பயன்படுத்தவோ, பாழ்படுத்தவோ முடியாமல் பாதுகாக்கிற வகையில் இந்த அவசர சட்டம் அமைகிறது.

    இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனது ஒப்புதலை வழங்கினார்.

    திவால் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக ஓராண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட காலமோ ஒருவரின் வங்கி கணக்கு என்.பி.ஏ., என முத்திரை குத்தப்பட்டு விட்டாலோ அல்லது தங்களுடைய கூடுதல் பற்றுத்தொகையை, வட்டியை செலுத்த முடியாவிட்டாலோ அவர்களையும் ஏலத்தில் பங்கேற்க தகுதியற்றவர்களாக ஆக்கப்படும் என்று அரசின் அறிக்கை கூறுகிறது.
    Next Story
    ×