என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க புதிய ஆணையம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
  X

  ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க புதிய ஆணையம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரக்கு, சேவை வரி திட்டத்தில் யாரும் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க உறுதி செய்யும் வகையில் தேசிய ஆணையம் அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
  புதுடெல்லி:

  சரக்கு, சேவை வரி திட்டத்தில் யாரும் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க உறுதி செய்யும் வகையில் தேசிய ஆணையம் அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

  நாடு முழுவதும், பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.)அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்று நான்கு விகிதங்களில் இந்த வரி விதிக்கப்படுகிறது.

  வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே பல பொருட்கள், சேவைகள் மீதான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டு உள்ளது.

  வரி குறைப்பு சலுகை முறைப்படி மக்களை சென்று அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. அதாவது வரி குறைந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையும் குறைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு வரிச்சலுகையின் பலன் கிடைக்கும்.

  ஆனால் பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்தால், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்குமே தவிர மக்களுக்கு வரிச்சலுகையின் பயன் கிடைக்காமல் போய்விடும்.

  இத்தகைய முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், அதாவது நியாயமற்ற முறையில் வியாபாரிகள் லாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் உயர்மட்ட அளவில் தேசிய அளவிலான ஆணையம் ஒன்றை அமைக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையிலான இந்த ஆணையத்தில் வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா, மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்று இருப்பார்கள்.

  குறைக்கப்பட்ட சரக்கு, சேவை வரியின் பலன் தங்களுக்கு கிடைக்காவிட்டால் நுகர்வோர் அதுபற்றி மாநில அளவிலான தேர்வுக்குழுவில் புகார் செய்ய வேண்டும். புகார் தேசிய அளவிலான நடவடிக்கைக்கு உரியது என்றால் அந்த புகார் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் படிப்படியாக இறுதி நடவடிக்கைக்காக தேசிய அளவிலான ஆணையத்துக்கு செல்லும். அந்த வகையில் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  வரி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால், அதனால் கிடைத்த கூடுதல் லாப தொகையை நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்துக்கு உத்தரவிடப்படும். புகார் மிகவும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்துக்கு தேசிய ஆணையம் அபராதம் விதிக்கும். அத்துடன் சரக்கு, சேவை வரி சட்டத்தின் படி அந்த நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யுமாறு உத்தரவிடும் அதிகாரமும் தேசிய ஆணையத்துக்கு உள்ளது.

  இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், தேசிய அளவிலான ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  பல்வேறு பொருட்களின் மீதான சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெறும் 50 பொருட்களின் மீதுதான் அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. பல பொருட்களின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி குறைப்பின் பலன் நுகர்வோரை அதாவது சாமானிய மக்களை சென்று அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது.

  எனவே வரி குறைப்பு செய்யாமல் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஆணையத்தை அமைக்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் மூலம் அரசு அறிவித்துள்ள வரி குறைப்பின் பலன் தங்களுக்கு கிடைக்கும் என்று நுகர்வோருக்கு வலுவான நம்பிக்கை ஏற்படும். மேலும் வரி குறைப்பின் பலன் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் உரிய முறையில் புகார் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

  இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார். 
  Next Story
  ×