search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குருவாயூர் பார்த்தசாரதி கோவில்
    X
    குருவாயூர் பார்த்தசாரதி கோவில்

    குருவாயூர் பார்த்தசாரதி கோவில் பிரச்சினை: திருச்சூரில் முழு அடைப்பு

    குருவாயூர் பார்த்தசாரதி கோவில் நிர்வாகம் மலபார் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதை கண்டித்து, திருச்சூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலின் நிர்வாகம் அந்த பகுதி மக்கள் பிரதிநிதி குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்தது.

    இந்த கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி அந்த கோவிலின் ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகத்தை மலபார் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    இதுதொடர்பான வழக்கில் கோவில் நிர்வாகத்தை மலபார் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கோவிலை மலபார் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மலபார் தேவஸ்தான தேவஸ்தான அதிகாரிகள் நகர போலீஸ் கமி‌ஷனர் ராகுல் தலைமையிலான போலீஸ் படையுடன் குருவாயூர் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்று இரவோடு இரவாக அந்த கோவிலை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் குருவாயூர் பார்த்தசாரதி கோவில் நிர்வாகம் மலபார் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதை கண்டித்து, திருச்சூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ஐக்கிய வேதி அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன்படி திருச்சூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. பஸ்களும் ஓடவில்லை. இதனால் திருச்சூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயுதம் ஏந்திய போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.


    Next Story
    ×