search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை திட்டமிட்ட கொள்ளை என்பதா? மன்மோகன்சிங்குக்கு அருண்ஜெட்லி கண்டனம்
    X

    பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை திட்டமிட்ட கொள்ளை என்பதா? மன்மோகன்சிங்குக்கு அருண்ஜெட்லி கண்டனம்

    பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை திட்டமிட்ட கொள்ளை என்று மன்மோகன்சிங் தெரிவித்து இருப்பதற்கு நிதி மந்திரி அருண்ஜெட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
    புதுடெல்லி:

    நமது நாட்டின் வரலாற்றில் நவம்பர் 8-ம் நாள் மறக்க முடியாத நாளாக பதிவாகி விட்டது.

    கடந்த ஆண்டு இதே நாள் இரவில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார்.

    அப்போது அவர் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி குவிவதை தடை செய்யவும் ஏதுவாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அதிரடியாக அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.



    அதன் தாக்கம் பல மாதங்கள் நீடித்தது. அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இன்று வரை எழுந்து வருகின்றன.

    நாட்டின் பொருளாதார மேதைகளில் ஒருவர் என அறியப்படுகிற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆமதாபாத்தில் தொழில் அதிபர்கள் மத்தியில் நேற்று பேசும்போது, “உயர் மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை, இது திட்டமிட்ட கொள்ளை, சட்டப்படியான கொள்ளை” என மிகக்கடுமையாக விமர்சித்தார்.

    இந்த நிலையில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 18 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் அணி இன்று (புதன்கிழமை) கருப்பு தினம் கடைப்பிடித்து போராட்டங்கள் நடத்த உள்ளது.

    இந்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று கருப்பு பண எதிர்ப்பு தினம் அனுசரிக்கிறார்கள்.

    இதையொட்டி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் மன்மோகன் சிங்குக்கு கண்டனம் தெரிவித்தார். “எதிர்க்கட்சி (காங்கிரஸ்) குற்றம் சாட்டுவதற்கு மாறாக, அவர்களது ஆட்சியின்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமல்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என பல ஊழல்களால் நாடு கொள்ளையடிக்கப்பட்டது” என்று அவர் சாட்டினார்.

    மேலும் “கருப்பு பணத்துக்கு எதிரான ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு நெறிமுறையான நடவடிக்கை. தார்மீக நடவடிக்கை. தார்மீக அடிப்படையிலும் சரி, நெறிமுறை அடிப்படையிலும் சரி, சரியான ஒரு நடவடிக்கை, அரசியல் ரீதியிலும் சரியான நடவடிக்கைதான்” என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொள்கை முடக்கம் ஏற்பட்டது. ஆனால் மோடி அரசால் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்கவும், தூய்மையான பொருளாதாரத்தை தரவும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    ஊழலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த பொருளாதார நிலையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா நம்புகிறது.

    கருப்பு பணத்துக்கு எதிராக அத்தகைய பெரிய நடவடிக்கை எதையும் முந்தைய அரசாங்கம் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமே ‘குடும்பத்துக்கு’ பணியாற்றுவதுதான். ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ நாட்டுக்கு பணியாற்றத்தான் விரும்புகிறது.

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இதனால் பல நன்மைகள் கிடைத்துள்ளன. (அவற்றை அருண் ஜெட்லி விரிவாக பட்டியலிட்டார்).

    பரந்த வரி அடிப்படையுடன், குறைவான காகித பண புழக்கத்துடன் இன்னும் கூடுதலான முறையான பொருளாதாரத்துடன் நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூடுதல் பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் பொருளாதார ஆதாரம் அதிகரித்துள்ளது. காப்பீட்டு துறையில், தொழிலாளர் வைப்பு நிதிகளில் கூடுதல் பணம் வந்துள்ளது.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி தடுப்பு

    நாட்டில் காகித பண புழக்கம் ஊழலை முற்றிலுமாய் ஒழித்து விடும் என்று எங்கள் அரசு கூறவில்லை. ஆனால், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வது ஒடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஊழல் புரிவதும் மிகக் கடினமான காரியம் ஆகி உள்ளது.

    நாட்டில் அதிகப்படியான காகித பண புழக்கத்தின் இயற்கையான விளைவு, வரி ஏய்ப்புதான். அதனால்தான் சரியாக வரி செலுத்துபவர் தனக்கு மட்டுமல்லாது, ஏய்ப்பவருக்கும் (மறைமுகமாக) வரி செலுத்த வேண்டியதாகிறது. எனவே சரியாக வரி செலுத்துபவருக்கு இது இரட்டை சுமையாக அமைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×