search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பத்திரிகையாளர் கொலை: ஹெல்மெட் அணிந்து வந்த கொலையாளி
    X

    பெண் பத்திரிகையாளர் கொலை: ஹெல்மெட் அணிந்து வந்த கொலையாளி

    பெண் பத்திரிகையாளரை கொலை செய்த மர்ம மனிதன் ஹெல்மெட் அணிந்து இருந்த காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கவுரிலங்கேஷ் (வயது55). நேற்று முன்தினம் இரவு 3 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் சாம்ராஜ்பேட் பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    கவுரிலங்கேஷ் பகுத்தறிவாதி என்பதால் எந்தவித மதசடங்குகளும் இல்லாமல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இரண்டு கண்களும் அவரது விருப்பப்படி தானமாக வழங்கப்பட்டன. உடனடியாக அந்த கண்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டன. இதன் மூலம் 2 பேர் பார்வை பெற்றனர்.

    முன்னதாக கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா கவுரிலங்கேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிறப்பு புலனாய்வுகுழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு முதல்- மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    புகழ்பெற்ற சிந்தனையாளரும், தலைசிறந்த பகுத்தறிவு வாதியும், மூத்த பத்திரிகையாளருமான கவுரிலங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான குழுவை உடனடியாக அமைக்குமாறு டி.ஜி.பி. ஆர்.கே.தத்தாவுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

    கவுரிலங்கேஷின் படுகொலை விவகாரத்தை மாநில அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கவுரிலங்கேஷின் சகோதரர் இந்திரஜித் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அவசியம் ஏற்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கை ஒப்படைக்க மாநில அரசுக்கு எந்தவித தடையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறப்பு புலனாய்வுகுழு (எஸ்.ஐ.டி.) டி.ஜி.பி. பி.கே.சிங் தலைமையில் அமைந்துள்ள குழு இந்த விசாரணையை நடத்தும் என்று கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.

    இந்த குழுவில் இடம்பெறும் பெயர்களை டி.ஜி.பி.ஆர்.கே.தத்தா உடனடியாக அறிவித்தார். எஸ்.ஐ.டி. டி.ஜி.பி. பி.கே.சிங் மேற்பார்வையில் இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக அனுசேத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவருக்கு உதவியாக பெங்களூரு நகர குற்றப் பிரிவு துணை கமி‌ஷனர் தினேந்திரகனகாவி, மைசூரு துணை இயக்குனர் ஹரிஷ் பாண்டே உள்ளிட்ட 19 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். இன்று இந்த குழுவினர் கவுரிலங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட உள்ளனர்.

    கவுரிலங்கேஷ் பணியாற்றிய பத்திரிகை அலுவலகத்தில் இருந்து அவரது வீடு உள்ள ராஜராஜேஸ்வரி நகர் வரை நகரில் பல பகுதிகளில் 32 சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன. அந்த கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கவுரிலங்கேஷ் காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் வந்தார்களா? என்று கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் கவுரிலங்கேஷ் வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டது. அந்த கேமிராவில் பதிவான காட்சிகளையும் , அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே கன்னட எழுத்தாளர் கலபுர்கியை கொன்ற கொலையாளிகளே இவரது கொலைக்கும் காரணம் என்ற முடிவுக்கு போலீசார் வந்து உள்ளனர். ஏனெனில் இவர்கள் 2 பேருமே இந்துத்துவா கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் ஆவார்கள். இதனால் ஒரு மத அமைப்பின் தீவிர பற்றாளர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு கர்நாடக போலீசார் வந்துள்ளனர்.

    கவுரிலங்கேஷ் கொலை செய்ய மர்ம நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கி நாட்டு துப்பாக்கி என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 0.32 ரக துப்பாக்கியால் அவர்கள் சுட்டதும் தெரியவந்துள்ளது.

    ஒரு மர்ம மனிதன் 4 முறை கவுரிலங்கேஷை துப்பாக்கியால் சுட்ட காட்சி அவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த மர்ம மனிதன் தலையில் ஹெல்மெட்டும் உடலில் துப்பாக்கி குண்டை தாங்கும் ஜாக்கெட் அணிந்து இருந்ததும் தெரியவந்தது. மேலும் 3 மர்ம மனிதர்கள் வந்த வாகன எண் கேமிராவில் பதிவாக வில்லை. அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த 3 பேரில் ஒரு மர்ம வாலிபர் காரில் இருந்து இறங்கிய கவுரிலங்கேஷை துப்பாக்கியால் சுடுகிறார்.

    அப்போது கவுரிலங்கேஷ் வேகமாக வீட்டுக்குள் ஓடுகிறார். அவரது அருகில் சென்ற அந்த மர்ம வாலிபர் மீண்டும் 3 முறை துப்பாக்கியால் சுடும் காட்சியும் பதிவாகி உள்ளது. துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் என்று போலீசார் கூறினார். ஆனால் அவர் யார்? என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    Next Story
    ×