search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொழிஞ்சாம்பாறை: ரெயில்வே கேட்டை உடைத்து தண்டவாளத்தில் கவிழ்ந்த கார்
    X

    கொழிஞ்சாம்பாறை: ரெயில்வே கேட்டை உடைத்து தண்டவாளத்தில் கவிழ்ந்த கார்

    கொழிஞ்சாம்பாறை அருகே சுற்றுலா வந்த கார், ரெயில்வே கேட்டை உடைத்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா (வயது 21). நேற்று இவர் ஒரு இளம் பெண்ணுடன் மலம்புழா அணைக்கு சுற்றுலா சென்றார். அணையை சுற்றிப்பார்த்த பின்னர் கஞ்சிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கோவைக்கு புறப்பட்டனர். கஞ்சிக்கோடு இம்மினிகுளம் ரெயில்வே கேட் அருகே 2 மணிக்கு கார் வந்தது.

    சேலம்- கொச்சி ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் 2.10 மணிக்குள் 3 ரெயில்கள் கடக்க வேண்டும். ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு ரெயில் ஏற்கனவே புறப்பட்டு விட்டது.

    இந்தநிலையில் இம்மினிகுளம் ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடும் பணியில் ஈடுபட்டார். கேட் பாதி மூடப்பட்ட நிலையில் சூர்யா கேட் அருகே காரை ஓட்டி வந்தார். தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று நினைத்த அவர் வேகமாக காரை ஓட்டினார்.

    கார் முற்றிலும் மூடப்பட்ட ரெயில்வே கேட் மீது வேகமாக மோதியது. இதில் கேட்டு தகர்ந்து ரெயில் தண்டவாளத்தின் நடுவே கார் சிக்கி கவிழ்ந்தது. 10 நிமிடத்துக்குள் 3 ரெயில்கள் வந்து விடும் என்று தெரிந்த கேட் கீப்பர் சாதுர்த்தியமாக செயல்பட முடிவெடுத்தார்.

    முதலில் ஒலவக்கோடு ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பதை பற்றி கூறினார். இதனையடுத்து புறப்பட தயாராக இருந்த 2 ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    ஏற்கனவே புறப்பட்ட ரெயிலை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டனர். அதன்படி ரெயில் நிறுத்தப்பட்டது. காருக்குள் சிக்கி காயம் அடைந்த சூர்யா மற்றும் இளம்பெண்ணை மீட்டு பாலக்காடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும் முயற்சியில் கேட் கீப்பர் இறங்கினார். எவ்வளவோ முயன்றும் காரை மீட்க முடியவில்லை. இது குறித்து கஞ்சிக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிரேன் உதவியுடன் தண்டவாளத்தில் சிக்கிய காரை மீட்டனர்.

    இந்த சம்பவத்தால் பெங்களூரு- எர்ணாகுளம் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரமும், திருவனந்தபுரம்- கோர்பா எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன்- ஈரோடு பயணிகள் ரெயில்கள் 55 நிமிடமும் கோவை- கண்ணணூர் பயணிகள் ரெயில் 40 நிமிடமும் தாமதமாக சென்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×