search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் கோலாகல விழா: 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
    X

    டெல்லியில் கோலாகல விழா: 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

    முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிந்தததைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 17-ந்தேதி தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் போட்டியிட்டனர்.

    கடந்த 20-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் ராம்நாத் கோவிந்த் 62 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நாட்டின் 14-வது ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதையொட்டி டெல்லியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற வளாகம் கோலாகலமாக காணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது.

    முதலில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகை முன்புறம் உள்ள மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். ராணுவ செயலாளர் தலைமையில் அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை கொடுத்தனர்.



    பிறகு ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றார். அங்கு அவரும் பிரணாப் முகர்ஜியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு இருவரும் பதவி ஏற்பு விழா நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டனர்.



    குதிரைப்படை அணி வகுப்பு செல்ல ராம்நாத் கோவிந்தும், பிரணாப் முகர்ஜியும் பாரம்பரிய காரில் அழைத்து வரப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்ற வளாகம் வரை அவர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி கண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

    பாராளுமன்ற வாசலில் அவர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி, அவர்கள் இருவரையும் வரவேற்று பாராளுமன்றத்துக்குள் அழைத்து சென்றார்.

    இதைத் தொடர்ந்து பிற்பகல் 12.15 மணிக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது. பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தனர்.

    இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. உடனே ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு பதவி ஏற்றார்.

    அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் அவர் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.



    பதவி ஏற்று முடித்ததும் மீண்டும் அவர் பாராளுமன்ற மைய மண்டபத்தில் திரண்டிருந்தவர்களுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்தார். பின்னர் அவரும் பிரணாப் முகர்ஜியும் இருக்கை மாற்றி அமர்ந்தனர். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றபின் பாரம்பரிய சம்பிரதாயமாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு தூதர்கள், முக்கிய பிரமுகர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு வீரர்கள் அணி வகுத்து நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அவரைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவர் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மாளிகையை சுற்றிக் காண்பித்தார். முக்கிய இடங்கள் பற்றிய குறிப்புகளை தெரிவித்தார்.

    பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இந்தியில் உரையாற்றி வருகிறார்.
    Next Story
    ×