search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 20 பேர் கைது
    X

    காஷ்மீர்: போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 20 பேர் கைது

    காஷ்மீர் மாநிலத்தில் மசூதி அருகே போலீஸ் டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், நவ்ஹாட் என்ற பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் கடந்த மாதம் 22-ம் தேதி மாலை பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துவிட்டு வெளியேவந்த போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவரை 200 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியது.

    அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். எனினும், அவரை சூழ்ந்துகொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி மற்றும் ஹுரியத் பிரிவினைவாதக் கட்சி தலைவர் மிர்வாயிஸ் உமர் பாரூக் ஆகியோர் இன்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக தேடி வந்தனர். தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவர் கடந்த 12-ம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், டி.எஸ்.பி. அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. முனிர் கான் இன்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர்.

    இன்னும் சிலர் விரைவில் பிடிபடுவார்கள். இவர்கள் அனைவரும் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×