search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு -  ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க. புகார்
    X

    சசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு - ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க. புகார்

    சசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பாரதீய ஜனதா புகார் அளித்து இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு அக்கட்சி வற்புறுத்தி உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக 2 அறிக்கைகளையும் அவர் தாக்கல் செய்தார்.



    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா மற்றும் சில சிறை அதிகாரிகளை கர்நாடக அரசு கூண்டோடு மாற்றியது.

    சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க கர்நாடக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு, கடந்த 17-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தியது. டி.ஐ.ஜி. ரூபாவிடமும் இந்த குழு விசாரணை நடத்தி உள்ளது.

    பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தலைமையிலான சட்டசபை பொதுக்கணக்கு குழுவின் முன்பு நேற்று முன்தினம் ஆஜரான கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா உள்ளிட்ட சிறை அதிகாரிகள், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

    இந்த நிலையில் ஆர்.அசோக் மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவின் விருந்தினர் மாளிகையாக மாறிவிட்டது. அங்கு அவருக்கு 5 அறைகளை ஒதுக்கி ராஜபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. இந்த விஷயத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.



    இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினோம். பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக் கப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு கோரி அவரிடம் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறோம்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    இதற்கிடையே, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவர் தற்போது சாதாரண அறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அந்த அறையிலேயே அவரது உறவினரான இளவரசியும் உள்ளார். அவர்கள் இருவரும் கைதி உடைக்கு மாறி உள்ளனர்.

    சசிகலாவை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற கைதிகளை போலவே சசிகலாவும் நடத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகள், கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கான வருகை பதிவேடு தொடர்பான ஆவணங்கள், சசிகலாவுக்கு செய்து கொடுக் கப்பட்ட சிறப்பு வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, சில ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் அவர் எடுத்துச்சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    Next Story
    ×