search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு: முதல்வரின் பெயரை சேர்க்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு: முதல்வரின் பெயரை சேர்க்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஒன்றை, தி.மு.க. மேல்-சபை எம்.பி. கனிமொழி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று நேரில் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த அத்துமீறல்கள் பற்றியும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றியும் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் முதல்-அமைச்சர் உள்பட பலரது பெயர்கள் உள்ளன. அந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட அறிக்கை காவல்துறைக்கு கொடுக்கப்படவில்லை.

    இதனால் ‘தெரியாத நபர்கள்’ என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, இதுபற்றி விசாரணை நடத்தி அவர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்க காவல்துறையை வலியுறுத்தவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நான் தேர்தல் கமிஷனில் அளித்துள்ளேன்.

    எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து குதிரை பேரம் நடத்தியது பற்றியும் சொன்னேன். ஆனால் அது தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்குள் வராது.



    செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வைப் போல தி.மு.க.வில் எந்த குழப்பமும், பிளவும் இல்லை. தி.மு.க.வை விட்டு நான் விலகப்போவதாக கூறுபவர்களின் கனவு நிச்சயம் பலிக்காது.

    அ.தி.மு.க. எத்தனை அணிகளாக பிரிந்தாலும் பா.ஜனதாவுக்கு விசுவாசம் மிக்கவர் யார்? என்பதில்தான் அவர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டின் நலனில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கான பதிலை கனிமொழி தொடங்கும்போது, ‘ஒரு குறிப்பிட்ட டி.வி.யை மட்டும் அனுமதித்து இருப்பார்களே’ என்று வேடிக்கையாக சொன்னார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, ‘இது நிச்சயமாக வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. தங்களுக்கு வேண்டும் என்கிறபோது அரசியல்வாதிகள், செய்தியாளர்களை தேடி ஓடுவதும், தவிர்க்க நினைக்கும்போது காக்க வைப்பதும் வேதனையானது. தமிழ்நாடு இல்லத்தில் நடந்த சம்பவம் அவமானப்பட வேண்டிய ஒன்று. நானும் பத்திரிகை துறையில் இருந்து வந்தவள் என்பதால் செய்தியாளர்களுக்கு ஆதரவாக இருப்பேன். தலைவர் கருணாநிதி செய்தியாளர்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். செய்தியாளர்களை அவமதிக்கும் இந்த நிலை தொடர்ந்தால் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’ என்றார். 
    Next Story
    ×