search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்த லாலு
    X

    பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்த லாலு

    பீகாரில் ரெயில்வே மந்திரியாக பணியாற்றிய போது பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்த லாலு பிரசாத் யாதவ், தற்போது அவரது குடும்பத்தினருடன் சிக்கி உள்ளார்.
    பாட்னா:

    இந்திய அரசியலில் பிரபலமான அரசியல் தலைவராக விளங்குபவர் லாலு பிரசாத் யாதவ். இன்று சொத்து குவிப்பு வழக்கில் குடும்பத்தோடு சிக்கி தவிக்கிறார்.

    பாட்னாவில் சட்டப் படிப்பு, அரசியல் படிப்பு என படித்து முடித்ததும் கால்நடை மருத்துவ கல்லூரியில் சாதாரண குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். அதே கல்லூரியில் அவரது அண்ணனும் பியூனாக வேலை பார்த்தார்.

    1970-ம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் யூனியன் பொது செயலாளர் ஆனார். 1974-ல் அதன் தலைவர் ஆனார். அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன், விலைவாசி உயர்வு, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். அதில் லாலு பிரசாத் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இவ்வாறு அரசியல் பயணத்தை தொடங்கிய லாலுபிரசாத் 1977-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு 29 வயதிலேயே எம்.பி. ஆனார். நாட்டிலேயே முதலாவது இளம் எம்.பி. என்ற பெயர் பெற்று பிரபலம் ஆனார்.



    அதன்பிறகு அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்துக்கு சென்றது. 1990-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பீகார் மாநில முதல்-மந்திரியானார்.

    மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி 1997-ம் ஆண்டு பதவி இழந்தார். அப்போது தனக்கு பதில் மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரி ஆக்கினார். அவர் 2005-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

    மனைவி முதல்-மந்திரியாக இருந்த போது லாலு பிரசாத் யாதவ் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகி காங்கிரஸ் கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியானார். 2009 வரை 5 ஆண்டுகள் ரெயில்வே மந்திரி பதவி வகித்தார்.

    ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழலில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியான பிறகு மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டார். ரெயில்வேயின் உணவு விடுதிகள் நடத்துவதில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டார். இதன்மூலம் டெல்லி, பாட்னா போன்ற இடங்களில் நிலங்கள், வீடுகள், மனைகளை பினாமிகள் பெயரில் வாங்கி குவித்தார்.

    பின்னர் அதை தனது மனைவி, மகள்கள், மகன்கள் நடத்தும் நிறுவனங்கள் பெயருக்கு மாற்றுக் கொண்டார். சமீபத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய விசாரணையில் லாலு பிரசாத்யாதவின் பினாமி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விவரங்களை பீகார் மாநில பா.ஜனதா தலைவரும் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார் மோடி அம்பலப்படுத்தினார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் வருமான வரித் துறையும், அமலாக்கப்பிரிவும் முடுக்கிவிடப்பட்டது.



    அதன்படி லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார், லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகனும் பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் சாந்தா, ராகினி ஆகியோருக்கு சொந்தமான டெல்லி, பாட்னாவில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

    லாலு குடும்பத்தினரின் பினாமி பெயரில் உள்ள சொத்தக்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என்று வருமான வரித்துறை கணக்கிட்டுள்ளது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பாட்னாவில் மட்டும் 9 பெரிய மனைகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். இதில் ஒரு இடத்தில் லாலு குடும்பத்தினர் வணிக வளாகம் கட்ட முடிவு செய்ததும் தெரிய வந்தது.

    தற்போது முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ. 9.32 கோடி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் உண்மையான சந்தைமதிப்பு ரூ 180 கோடி வரை இருக்கும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்யவும் வருமான வரித்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    ஏற்கனவே மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று லாலு பிரசாத் ஜாமீனில் இருக்கிறார். இப்போது அவரது குடும்பத்தினர் மீது பினாமி சொத்து ஒழிப்பு நடவடிக்கையும் பாய்ந்து இருப்பது லாலுவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவரது அரசியல் பணியில் பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

    லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்குகள் காரணமாக பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கூட்டணி ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×