search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்: இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
    X

    மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்: இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    மும்பை:

    ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மும்பையில் உள்ள டாட்டா நினைவு மருத்துவமனையின் 75-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு மலரை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிப்பணிகளில் 75 ஆண்டுகளாக டாட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் மிகச்சில மருத்துவமனைகளே இதுபோன்று மக்களின் பிணிபோக்கும் பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு உள்ளன. ஏழைகளுக்கு சேவை புரிந்து வருவதற்காக ரத்தன் டாட்டா மற்றும் டாட்டா நினைவு மருத்துவமனையை வாழ்த்துகிறேன்.

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களில் 75 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த நிலை மாற வேண்டும். ஏனெனில் இந்த உபகரணங்களால் நோயாளிகளின் சிகிச்சைக்கு அதிக செலவாகிறது.

    எனவே மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலேயே உருவாக்குவது எப்படி? என்று ஆய்வில் ஈடுபடுமாறு ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏழைகளும் குறைந்த செலவில் சிகிச்சை பெறுவதற்காக இந்த உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்.

    அனைவருக்கும் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் நோக்கில் தேசிய சுகாதார கொள்கையை நாங்கள் வகுத்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனும் மிகச்சிறந்த சிகிச்சை பெறுவதற்காக நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளை புதிதாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதில் 6.5 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருகின்றனர். இது அடுத்த 30 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது வெறும் 36 மருத்துவமனைகளே புற்றுநோய் துறையில் இணைக்கப்பட்டு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 108-ஆக உயர்ந்துள்ளது.

    டாட்டா நினைவு மையத்தின் உதவி மற்றும் நிபுணத்துவம் மூலம் வாரணாசி, சண்டிகர், விசாகப்பட்டணம், கவுகாத்தி ஆகிய இடங்களில் மேலும் 4 புற்றுநோய் ஆய்வு மையங்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் புற்றுநோய் தாக்கியவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
    Next Story
    ×