search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித் வீட்டில் ஓட்டல் உணவு சாப்பிட்ட எடியூரப்பா: முதல்வர் சித்தராமையா விமர்சனம்
    X

    தலித் வீட்டில் ஓட்டல் உணவு சாப்பிட்ட எடியூரப்பா: முதல்வர் சித்தராமையா விமர்சனம்

    பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தலித் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடாமல், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட இட்லியையும், குடிநீரையும் அருந்தியதை கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
    பெங்களூர்:

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலித் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட மறுத்து ஓட்டலில் இருந்து இட்லி வரவழைத்து சாப்பிட்டார்.

    பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, தும்கூர் உள்பட பல இடங்களில் தலித் வீடுகளுக்கு சென்று காலை சிற்றுண்டி சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னாள் முதல்-மந்திரியும் மாநில பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா சித்ரதுர்காவில் மதுகுமார் என்ற தலித் வீட்டில் காலை சிற்றுண்டி சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மதுகுமார் தனது வீட்டிலேயே காலை சிற்றுண்டி சமைத்து ஏற்பாடு செய்து இருந்தார்.

    ஆனால் எடியூரப்பா அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு சமைத்த உணவை சாப்பிட மறுத்து ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட இட்லியை சாப்பிட்டார். இதே போல் குடிநீரும் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட பாட்டில் குடிநீரையே குடித்தார்.

    இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தலித் வீட்டில் சாப்பிடுவது போல் எடியூரப்பா நாடகம் ஆடி இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    எடியூரப்பா இட்லியும், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரும் சாப்பிடும் வீடியோ உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வெங்கடேஷ் என்பவர் மாண்டியா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எடியூரப்பா தீண்டாமையை கடைப்பிடித்து இருக்கிறார். அவர் மீது தீண்டாமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



    ஆனால் இதை எடியூரப்பா மற்றும் விருந்துக்கு ஏற்பாடு செய்த மதுகுமாரும், பா.ஜனதாவும் மறுத்துள்ளது. மதுக்குமார் கூறுகையில், “காலை சிற்றுண்டிக்கு கட்சி தொண்டர்கள் நிறைய பேர் வந்ததால் உணவு போதுமானதாக இல்லை. இதனால் ஓட்டலில் இருந்து வரவழைத்தோம்” என்றார்.

    எடியூரப்பா கூறுகையில், “நான் தலித்துகளுடன் அமர்ந்து சாப்பிட்டதை பொறுக்கமாட்டாமல் காங்கிரஸ் இது போன்று புது சாயம் பூசுகிறது” என்றார்.

    இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கேட்ட போது, “எனது 40 ஆண்டு அரசியலில் இது போன்று ஓட்டலில் இருந்து உணவு வரவழைத்து தலித் வீட்டில் சாப்பிட்டது யாரும் கிடையாது” என்றார்.
    Next Story
    ×