search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மத்திய அரசின் முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை
    X

    நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மத்திய அரசின் முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 2 ஆண்டு சிறை

    நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி

    மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள ‘தெஸ்கோரா–பி ருத்ரபுரி’ நிலக்கரி சுரங்கத்தை கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மே 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் மத்திய அரசின் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, நிலக்கரி அமைச்சக அப்போதைய இணை செயலாளர் கே.எஸ்.கிரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமரியா ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி பாரத் பரா‌ஷர் தீர்ப்பளித்தார். மேலும் கே.எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் பவன்குமார் அலுவாலியா ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.



    இந்நிலையில், முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, இணை செயலாளர் கே.எஸ்.கிரோபா மற்றும் இயக்குனர் கே.சி.சமரியா ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் தண்டனை அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் உத்தரவிட்டார். 

    இருப்பினும் எச்.சி.குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் தனிப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் நீதிபதி ஜாமீன் வழங்கினார். அதேபோல்,  ரூ.1. லட்சத்தையும் நீதிமன்றத்தில் கட்டவும் உத்தரவிடப்பட்டது.
    Next Story
    ×