search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நடிகர் அக்‌ஷய் குமாருக்கு எம்.பி. சீட் வாய்ப்பு?: பா.ஜனதா முடிவு
    X

    நடிகர் அக்‌ஷய் குமாருக்கு எம்.பி. சீட் வாய்ப்பு?: பா.ஜனதா முடிவு

    பாரதிய ஜனதா எம்.பி. வினோத்கன்னா மரணம் அடைந்த குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் அக்‌ஷய் குமாரை வேட்பாளராக நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    பழம்பெரும் இந்தி நடிகரும், பாரதிய ஜனதா எம்.பி.யுமான வினோத் கன்னா கடந்த மாதம் 27-ந் தேதி புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

    வினோத்கன்னா பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். அவர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் இடைதேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது குறித்து பாரதிய ஜனதா ஆலோசனை செய்து வருகிறது. வினோத்கன்னா குடும்பத்தை சேர்ந்தவருக்கு சீட் கொடுக்க அந்த கட்சி விரும்பவில்லை. மும்பையில் நேற்று நடந்த வினோத் கன்னா இரங்கல் கூட்டத்தில் டெல்லியை சேர்ந்த பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    குர்தாஸ்பூர் தொகுதியில் இந்தி நடிகர் ஒருவரையே நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் அக்‌ஷய் குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத அவர் தேச பக்தி உள்ள படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்றுள்ளார். இதனால் அவரை நிறுத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.



    இதே போல் மற்றொரு இந்தி நடிகர் ரிஷிகபூர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. டுவிட்டரில் அதிகமாக கருத்துக்களை வெளியிடும் அவருக்கு பெரும் அளவில் ஆதரவு இருக்கிறது.

    கபூர் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தது இல்லை என்பதால் அவரும் வாய்ப்பில் உள்ளார். அக்‌ஷய் குமாரும், ரிஷிகபூரும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்த இருவரில் ஒருவருக்கு ‘சீட்’ கிடைக்கலாம்.

    மேலும் ரவீணா தண்டன், சோனு நிகம், சன்னி தியோல் ஆகியோரது பெயர்களும் விவாதத்தில் உள்ளன. இதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளவருக்கு டிக்கெட் கொடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜனதா தோல்வி அடைந்தது. இதனால் சரியான நபரை நிறுத்துவதில் அந்த கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
    Next Story
    ×