search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாயத்து நிதிஉதவி கிடைக்காததால் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்
    X

    பஞ்சாயத்து நிதிஉதவி கிடைக்காததால் தாலியை விற்று கழிப்பறை கட்டிய பெண்

    உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து நிதிஉதவி கிடைக்காததால் ஏழைப்பெண் தொழிலாளி தாலியை விற்று கழிப்பறை கட்டி வருகிறார்.
    அலகாபாத்:

    கிராமப்புறங்களில் வீடு தோறும் கழிப்பறைகள் திட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பஞ்சாயத்துகள் மூலம் மானியம் வழங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில் மானியம் கிடைக்காததால் ஏழைப்பெண் தொழிலாளியான மீனாகுமாரி தனது தாலியை விற்று கழிப்பறை கட்டியுள்ளார்.

    பிரதாப்கார் மாவட்டம் ஜோகாபூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாகுமாரி தனது வீட்டில் கழிப்பறை கட்ட முடிவு செய்தார். இதற்கான மானியம் கேட்டு பஞ்சாயத்தில் விண்ணப்பம் செய்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணம் கிடைக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி மீனாகுமாரி தனது தாலி செயினை விற்று கழிப்பறை கட்டி வருகிறார். கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இதுபற்றி மீனாகுமாரி கூறுகையில், கிராமங்களில் கழிப்பறை இல்லாததால் வெளியில் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். எனவே நான் கழிப்பறை கட்ட முடிவு செய்து பஞ்சாயத்தில் நிதிஉதவி கேட்டேன். பல மாதங்கள் ஆகியும் எந்த உதவியும் கிடைக்காததால் நானே சொந்தமாக என்னிடம் இருந்த பணத்தை வைத்து கழிப்பறை கட்டி இருக்கிறேன். அதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் தாலி செயினை விற்று செலவு செய்தேன். திருமணத்துக்கு அடையாளமாக விளங்கும் தாலியின் புனிதத்தை விட நான்கு சுவர்களுடன் கூடிய கழிவறைதான் முக்கியம் என கருதுகிறேன் என்றார்.

    மாவட்ட கலெக்டர் கூறுகையில், மீனாகுமாரிக்கு ஏன் நிதி உதவி கிடைக்கவில்லை என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

    மீனாகுமாரியின் மூத்த மகள் பிளஸ்-2 படிக்கிறார். 2 மகன்கள் ஆரம்ப கல்வி பயில்கிறார்கள்.
    Next Story
    ×