search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினை: மோடிக்கு எதிராக திரும்பும் நிதிஷ்குமார்
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினை: மோடிக்கு எதிராக திரும்பும் நிதிஷ்குமார்

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    பாட்னா:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த போது அதை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு ஆகியோர் வர வேற்றனர்.

    இவர்களில் சந்திரபாபு நாயுடு பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கிறார். அதனால் அவர் ஆதரித்தது பெரியதாக தெரியவில்லை. ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருந்த நிதிஷ்குமார் பிரதமர் முடிவுக்கு ஆதரவு அளித்தது ஆச்சரியமாக இருந்தது.

    இந்த நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சினை பொது மக்களை பெரிதும் பாதித்ததால் சந்திரபாபு நாயுடு தனது முடிவை மாற்றிக் கொண்டு எதிரான கருத்தை சமீபத்தில் கூறினார்.

    இப்போது பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமாரும் ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடிக்கு எதிராக திரும்பி இருக்கிறார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாரத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    ரூபாய் நோட்டு பிரச்சினையில் ஆரம்பத்தில் லல்லு பிரசாத் மவுனம் சாதித்தாலும் பின்னர் மத்திய அரசின் முடிவுவை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார். இப்போது மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்து உள்ளார்.

    இதுவரை மவுனம் சாதித்து வந்த நிதிஷ்குமார் தனது நிலையை மாற்றி இருக்கிறார். பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் இது சம்பந்தமாக அவர் எதிர்கருத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களையும் அவர் கேட்க திட்டமிட்டுள்ளார். இதில் ரூபாய் நோட்டு சம்பந்தமாக எதிர்கருத்து வந்தால் அவரும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுப்பார் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போது கருப்பு பணம் ஒழிப்புகாகத் தான் இந்த அறிவிப்பு வந்ததால் அதை நிதிஷ்குமார் வர வேற்றார்.

    இதனால் சில நாட்களுக்கு மட்டும் தான் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்கும்என்று எதிர்பார்த்தார். ஆனால் நிலைமை தலை கீழாக உள்ளது. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது.

    எனவே தான் நிதிஷ்குமார் தனது முடிவில் இருந்து மாறுகிறார். மக்களின் மன நிலைக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் லல்லுபிரசாத் யாதவ், நிதிஷ்குமாரை சந்தித்தார். அதன் பிறகு லல்லு பிரசாத் கூறும் போது, நிதிஷ்குமார் 50 நாட்களுக்கு மட்டும் காத்திருக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகும் நிலைமை சரியாக விட்டால் எதிரான நிலையை எடுப்பார் என்று கூறினார்.

    அவர் கூறியது படி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு நாளையுடன் 50 நாட்கள் ஆகிறது.

    எனவே நாளை முடிந்ததும் நிதிஷ்குமார் தனது கருத்தை வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

    தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மோடிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு திரட்டி வருகிறார். இந்த அணியில் நிதிஷ்குமாரும் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×