search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்த அய்யப்ப பக்தர்கள்
    X
    சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்த அய்யப்ப பக்தர்கள்

    நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை

    நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது.

    இதையொட்டி சபரிமலையில் தமிழக, கேரள, ஆந்திர பக்தர்கள் உள்பட திரளானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது. இதை தொடர்ந்து சபரிமலையில் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் சமீபத்தில் கேரள மாநிலம் கண்ணூர் கனகமழை பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் சபரிமலை கோவிலில் நாசவேலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

    இதன் எதிரொலியாகவும் நாளை (6-ந்தேதி) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை கோவிலுக்கு செல்லும் காட்டுப்பகுதி வழியாகவும் தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகளவு செல்லத் தொடங்கி உள்ளனர். இந்த பக்தர்கள் தனித்தனியாக செல்லாமல் குழுவாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பக்தர்கள் வேடத்தில் தீவிரவாதிகள் சபரிமலையில் ஊடுருவும் அபாயம் இருப்பதால் மாறுவேடத்திலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    தற்போது சபரிமலையில் சன்னிதானத்தில் 1500 போலீசாரும் பம்பையில் 1000 போலீசாரும் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக ஆள் இல்லாத விமானமும் பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானத்தில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலமும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



    Next Story
    ×